அமராவதி: அண்மையில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது.
இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசுமீது கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த பிரச்சினை தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பதி லட்டுவில் குட்கா எனப்படும் புகையிலைப் பொருளின் பொட்டலம் இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கொல்லகூடேம் பகுதியை சேர்ந்த பத்மா என்பவர், கடந்த 19ஆம் தேதி திருப்பதி கோவிலில் வாங்கிய லட்டுவில் குட்கா இருந்ததாக காணொளி ஒன்றை வெளியிட்டு தனது புகாரை தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவிவருகிறது.
இந்த புகார் குறித்து விசாரிக்க திருப்பதி தேவஸ்தான குழு கொல்லகூடம் கிராமத்திற்குச் செல்ல உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

