தானே: பிஸ்கட் உற்பத்தி செய்யும் ஆலையில் இயந்திரத்தில் இருந்த பிஸ்கட் ஒன்றை எடுக்கப்போன சிறுவனின் கை சிக்கி அவன் இறக்க நேரிட்டது.
இத்துயரம், இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், அம்பர்நாத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 2) நிகழ்ந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“ஆயுஷ் சௌகான் என்ற அந்தச் சிறுவன் பிஸ்கட் ஆலைக்குத் தன் தாயாருடன் சென்றான். சிறுவனின் தாயார் அங்கு உணவு விநியோகம் செய்பவர். அங்கு ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தில் இருந்த பிஸ்கட்டை எடுக்கச் சென்ற சிறுவனின் கை அதில் சிக்கியது. ஆலை ஊழியர்கள் சிறுவனை மீட்டு அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் மாண்டுவிட்டதாகக் கூறினர்,” என்று அந்த அதிகாரி விவரித்தார்.
பின்னர் உடற்கூறாய்விற்காகச் சிறுவனின் உடல்அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்த அந்த அதிகாரி, சிறுவன் விபத்தில் மரணம் அடைந்ததாக வழக்கு பதிவு செய்ததாகக் கூறினார்.

