சலவை இயந்திரத்தில் குழந்தை; பிள்ளைப் பராமரிப்பாளர்களின் சித்திரவதை அம்பலம்

சலவை இயந்திரத்தில் குழந்தை; பிள்ளைப் பராமரிப்பாளர்களின் சித்திரவதை அம்பலம்

படம்: எக்ஸ் தளம்

03 Jul 2026 - 6:16 pm

1 mins read

பெங்களூரு: கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் வளாகத்தில் செயல்படும் பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் பிள்ளைப் பராமரிப்பாளர் ஐவர், சிறாரைத் துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நிலையத்தில் பராமரிக்கப்பட்ட பெரும்பாலான பிள்ளைகளின் பெற்றோர் மேற்குறிப்பிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊழியர்கள் ஆவர்.

இரண்டு முதல் மூன்று வயதுடைய பிள்ளைகளைச் சலவை இயந்திரத்தில் வைப்பதாக மிரட்டியது, அழுகையை நிறுத்த பிள்ளைகளைக் கழிவறையில் பூட்டி வைப்பது போன்ற சித்திரவதைகளில் அவர்கள் ஈடுபட்டதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அங்குப் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பதிவு செய்த நான்கு காணொளிகள், பிள்ளைகள் தொடர்பான புகார்களைக் கையாளும் அதிகாரியிடம் சிக்கியதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

அதிகாரி அளித்த தகவலின்படி காவல்துறையினர் அந்தப் பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தைச் சோதனை செய்து, அங்குப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவிகளின் பதிவுகளைப் பறிமுதல் செய்தனர்.

பிள்ளைத் துன்புறுத்தலில் தொடர்புடைய பராமரிப்பாளர்களில் ஒருவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தற்காலிகமாக அந்த நிலையத்தை மூடியுள்ளதாகவும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஊழியர்களின் பாதுகாப்புக்குத் தங்களது தலையாய முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அந்தத் தகவல், தொழில்நுட்ப நிறுவனம் கூறியுள்ளது.

இந்தச் சம்பவம் வேலையிடப் பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்தின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோரிடையே பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்