நாடு முழுவதும் நீதிமன்றங்களில் பெண்கள் கழிப்பறை: நீதிபதிகள் உத்தரவு

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் பெண்கள் கழிப்பறை: நீதிபதிகள் உத்தரவு

2 mins read
71fe41b4-2648-43a4-8073-7e7e4a949861
நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி இந்த உத்தரவிலிருந்து மாநில அரசுகள் தப்பிக்க முடியாது என்பதை நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தினர். - கோப்புப் படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், அடுத்த ஆறு வாரங்களுக்குள் பெண்களுக்கான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ‘தூய்மை இந்தியா’ இயக்கம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இத்தனை ஆண்டுகளாக நீதிமன்ற வளாகங்களில் பெண்களுக்குப் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாதது வேதனை அளிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் பெண் வழக்கறிஞர்களுக்கான கழிப்பறைகளைக் கட்டுவது குறித்து ஆறு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி இந்த உத்தரவிலிருந்து மாநில அரசுகள் தப்பிக்க முடியாது என்பதை நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தினர்.

“நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் போதிய அடிப்படை வசதிகளே இல்லை என்பது தெரிய வருகிறது.

“கழிவறையைப் பயன்படுத்துவது என்பது அடிப்படை மனித உரிமை. அதற்குப் போதிய நிதி இல்லை என காரணம் கூறப்படுவதை ஏற்க முடியாது.

“நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்கள் பணியாற்றும் சூழல் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை தயவு செய்து பாருங்கள். அனைத்து மாநிலங்களிலும் அரசுத் தலைமை வழக்கறிஞர்கள் கள நிலவரத்தை ஆராய்ந்து, இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கை விசாரித்தபோது தெரிவித்தது.

இது பெண் வழக்கறிஞர்களின் கண்ணியம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த மிக முக்கியமான விஷயம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதற்காகச் சிறப்பு நிதியை உருவாக்குவது குறித்து அடுத்த ஆறு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசுத் தலைமை வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்