தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளி போனஸ் தராததால் சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்; பல லட்ச ரூபாய் இழப்பு

1 mins read
ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றன
428007a3-3c10-40e8-86b5-b8649a4cd43a
கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்குப் பிறகு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். - படம்: இந்திய ஊடகம்

ஆக்ரா: சொன்னபடி தீபாவளி போனஸ் வழங்கப்படாததால் கட்டணவாயில்களைத் திறந்துவிட்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்றதால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் அமைந்துள்ள ஃபதேகாபாத் சுங்கச்சாவடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) இச்சம்பவம் நிகழ்ந்தது.

அவ்வூழியர்கள் ஸ்ரீசாய் அண்ட் தத்தர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.

“கடந்த ஓராண்டாக இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இதுவரையிலும் போனஸ் எதுவும் வழங்கப்படவில்லை. கடுமையாக உழைத்தாலும் சம்பளமும் சரியான நேரத்திற்குத் தரப்படவில்லை. இப்போது, வேறு ஊழியர்களைப் பணியமர்த்தப்போவதாகச் சொல்கின்றனர். எங்களுக்கு போனசும் தரமாட்டார்கள்,” என்று போராட்டத்தில் குதித்த ஊழியர்களில் ஒருவர் கூறினார்.

தீபாவளிக்கு முந்திய வாரமே தங்களது வங்கிக் கணக்குகளில் போனஸ் வரவு வைக்கப்பட்டுவிடும் என்று நிறுவனம் உறுதியளித்தது என்றும் ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்றும் ஊழியர்களில் சிலர் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு சுங்கச்சாவடிகளின் அனைத்துக் கட்டணவாயில்களைத் திறந்துவிட்டு, கட்டணம் செலுத்தாமலேயே வாகனங்களைச் செல்ல அனுமதித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஊழியர்கள் அங்கேயே அமர்ந்து போராடியதாகவும் போனஸ் வழங்குவதாக உறுதியளித்த பிறகு போராட்டத்தைக் கைவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்