“மருத்துவமனையில் என்னுடைய அனுமதியின்றி படம் எடுத்தார்கள்”

பி.டி. உஷாவைத் தாக்கிய வினேஷ் போகத்

“மருத்துவமனையில் என்னுடைய அனுமதியின்றி படம் எடுத்தார்கள்”

2 mins read
f96c2fe2-ab80-48af-9467-cc5ee1f36209
வினேஷ் போகத் மருத்துவமனையில் இருந்தபோது அவரை பி.டி. உஷா சந்தித்ததாக புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் வெறுங்கையுடன் திரும்பியது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒலிம்பிக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்டபோது, அதிகபட்ச உதவியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா வழங்கவில்லை என்று வினேஷ் போகத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் முதல் முறையாக வினேஷ் போகத் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆனால், கடைசி நிமிடத்தில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக ஒலிம்பிக் அமைப்பு அறிவித்தது.

இறுதிச் சுற்று வரை முன்னேறியதால் அவருக்கு வெள்ளிப் பதக்கத்தையாவது வழங்க வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல் எழுந்தது.

இருப்பினும், அனைவரின் கோரிக்கைகளையும் ஒலிம்பிக் சங்கம் நிராகரித்துவிட்டது.

இந்நிலையில், தான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் தனக்கு ஆதரவளிப்பதுபோன்று புகைப்படங்களை எனது அனுமதியின்றி எடுத்து அரசியலாக்கியதாகவும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான பி.டி. உஷாவை வினேஷ் போகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் மயக்கமடைந்த வினேஷ் போகத், ஒலிம்பிக் கிராமத்தில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது, அவரை நலம் விசாரிக்கச் சென்ற பி.டி. உஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி பலரது கவனத்தை ஈர்த்தது.

மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அவர் களமிறங்கியுள்ளார்.

இதற்கிடையே, உள்ளூர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தான் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து வினேஷ் போகத் பேசியுள்ளார்.

“மருத்துவமனை படுக்கையில் இருந்தபோது என்னுடன் நீங்கள் நிற்பதாக எல்லோரிடமும் காட்டுவதற்காக என் அனுமதியின்றி புகைப்படத்தை எடுத்து பகிர்ந்துள்ளனர். உங்கள் ஆதரவை அவ்வாறு தெரிவிக்க வேண்டியதில்லை,” என்று வினேஷ் போகத் கூறினார்.

இந்தச் சம்பவத்தால் தான் உடைந்துபோனதாகவும் அவர் தெரிவித்தார்.

“எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என்று தெரியவில்லை. பி.டி.உஷா என்னை மருத்துவமனைக்கு வந்து சந்தித்தார். புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னணியில் அரசியல் நடக்கிறது. என்னை மல்யுத்தத்தை விடவேண்டாம் என்று பலரும் கூறினர். நான் எதற்காக தொடர வேண்டும். எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது,” என்று வினேஷ் போகத் மேலும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்