புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியுடன் வடமாநில நகரங்கள் பலவும் அசுத்த காற்றில் சிக்கித் திணறுகின்றன.
வடமாநிலங்களில் குளிர்பருவத்தின்போது காற்று மாசு ஏற்படுவது வழக்கம். ஆயினும், இவ்வாண்டு பஞ்சாப், ஹரியானா ஆகிய அண்டை மாநிலங்களில் மரங்களை வெட்டி எரிப்பதால் தலைநகர் டெல்லியின் காற்று மாசு மோசமான கட்டத்திற்குள் நுழைந்தது.
டெல்லியுடன் குருகிராம், நொய்டா, காசியாபாத் போன்ற முக்கிய நகரங்களிலும் காற்றுத் தரக் குறியீட்டின் அளவு ‘மிகவும் கடுமை’ என்ற பிரிவில் உள்ளது.
இது உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த பாதுகாப்பு வரம்புகளைவிட மிகவும் அதிகம்.
வடஇந்தியாவைச் சூழ்ந்திருக்கும் காற்று மாசு, விண்வெளியிலிருந்து பார்த்தாலும் தெரிவதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் இதே காலகட்டத்தைவிட, இந்த மாதம் வடஇந்தியா எந்த அளவுக்கு காற்று மாசினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதும் விண்வெளியில் கண்கூடாகத் தெரிகிறதாம்.
வடஇந்தியாவை ஒரு சாம்பல் நிற புகை மண்டலம் சூழ்ந்திருப்பது விண்வெளியிலிருந்து பார்த்தால் தெரிகிறது என்று ரெட்டிட் தனது வரைபடத்துடன் தகவல் வெளியிட்டிருக்கிறது.
அந்த வரைபடத்தைப் பார்த்து வெளிமாநில மக்களைவிடவும் டெல்லி மக்கள் அதிகக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“காற்று மாசு எனப்படும் பேரிடர் மெல்ல எங்களது உயிரைக் குடித்துக்கொண்டிருக்கிறது,” என்று ஒருவரும் “மிகக் கடினமான நேரம் இது, பலருக்கும் இப்போதே நுரையீரல் பிரச்சினைகள் ஆரம்பித்துவிட்டன,” என்று இன்னொருவரும் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.