மும்பை: ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, மகாராஷ்டிராவில் தனது புதிய தொழிற்சாலையைக் கட்டவுள்ளது.
இந்தியாவில் தனது உற்பத்தித் தளத்தை விரிவுபடுத்தும் நோக்கில், ஆண்டுக்கு 100,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அந்த ஆலையை அந்நிறுவனம் அமைக்கவுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள பிட்கின் தொழில்துறை பகுதியில் நிறுவப்படும் அந்த ஆலை, 2029ஆம் ஆண்டின் முதல் பாதியில் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடக்கத்தில், கிட்டத்தட்ட 2,800 பேருக்கு வேலைவாய்ப்பை அது வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், டொயோட்டாவின் புதிய எஸ்யூவி வகை கார்கள் அங்குத் தயாரிக்கப்படும்.
டொயோட்டோ நிறுவனத்தின் உற்பத்திக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் இந்தியாவின் எதிர்காலத் தேவை, சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படவும் மகாராஷ்டிராவில் அமைக்கப்படும் அந்தப் புதிய ஆலை உதவும் என டொயோட்டா தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவிலும் அந்நாட்டின் அருகிலுள்ள வட்டாரங்களிலும் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை அந்த ஆலை வழங்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்திய வாகனச் சந்தையில் முன்னோடிகளாகத் திகழ்ந்த நிறுவனங்களுடன் இணைந்து டொயோட்டாவின் வர்த்தகம் முன்னேறியுள்ளதாகவும் அவைகளிடமிருந்து விலைமதிப்பற்ற கற்றலையும் ஆதரவையும் பெற்றுள்ளதாகவும் அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவின் வாகனத் தொழில், உள்ளூர் சமூகங்களின் வளர்ச்சியில் அந்த ஆலை முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் டொயோட்டா கூறியுள்ளது.
அந்தப் புதிய ஆலைக்கான முதலீடு தோராயமாக $1.9 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய வாகன ஆலைத் திட்டங்களில் ஒன்றாகும்.
ஏற்கெனவே, அந்நாட்டில் $3 பில்லியன் முதலீடு செய்துள்ள டொயோட்டா, இந்தியாவை ஜப்பானுக்கு வெளியே தனது மூன்றாவது பெரிய சந்தையாக மாற்றியுள்ளது.
அந்தப் புதிய ஆலை மூலம், 2030களில் இந்தியாவின் உற்பத்தித் திறனை ஒரு மில்லியன் கார்களாக உயர்த்த அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

