வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா-இந்தியா இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா-இந்தியா இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

2 mins read
965d057b-3dcb-403c-aced-5d91751eff53
இந்திய வர்த்தகக் குழு ஒன்று ஏப்ரல் 20ஆம் தேதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறது. - சித்திரிப்புப் படம்: டெக்கான் ஹெரால்ட்
multi-img1 of 2
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் இம்மாதம் மீண்டும் தொடங்க உள்ளதாக இந்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக இந்திய வர்த்தகக் குழு ஒன்று ஏப்ரல் 20ஆம் தேதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறது. அங்கு 22ஆம் தேதி வரை நடைபெற உள்ள வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் அக்குழுவினர் பங்கேற்பர் என ஏஎன்ஐ ஊடக முகவையின் அறிக்கை ஒன்று தெரிவித்தது.

வர்த்தக அமைச்சின் கூடுதல் செயலாளர் தர்பன் ஜெயின் இத்தகவலை உறுதி செய்துள்ளார். இந்தியக் குழுவுக்கு இவர் தலைமையேற்க உள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் திரு நரேந்திர மோடியும் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் தொலைபேசியில் உரையாடினர். ஏறக்குறைய 40 நிமிடங்கள் நீடித்த பேச்சுவார்த்தையை அடுத்து, இந்திய வர்த்தகக் குழு அமெரிக்காவுக்குப் பயணமாவது உறுதியாகி உள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.

இரு தலைவர்களும் பல்வேறு துறைகளின்கீழ் இருதரப்பு ஒத்துழைப்பில் எட்டப்பட்ட கணிசமான முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ததாகவும் மோடி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்கெனவே ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை இறுதி செய்துவிட்டன. எனவே, வர்த்தக அமைச்சு அதிகாரிகளுக்கு இடையேயான அடுத்தகட்ட சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதத்திலேயே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் சுங்கவரிச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தாவது தாமதமானது.

இதனிடையே, இந்தியா-அமெரிக்கா இருதரப்பு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மார்ச் 27ஆம் தேதி அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

இதுகுறித்து தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு கோயல், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியுடனான கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருதரப்பு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், பொருளியல் ரீதியிலான ஒத்துழைப்பு, இருதரப்பு வர்த்தக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் பியூஷ் கோயலின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அனைத்து அமெரிக்கத் தொழில்துறைப் பொருள்கள், விவசாய மற்றும் உணவுப் பொருள்கள் மீதான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.

தன் பங்கிற்கு அமெரிக்கா, இந்திய ஏற்றுமதிகள் மீது 18 விழுக்காடு என்ற குறைக்கப்பட்ட பரஸ்பர வரி விகிதத்தை விதிக்கும். பேச்சுவார்த்தைகள் முன்னேறும்போது மேலும் வரிகளைக் குறைப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காவர்த்தகம்ஒப்பந்தம்குழுபேச்சுவார்த்தை