டெஸ்லா, டாடா குழுமங்கள் இடையே வர்த்தகக் கூட்டணி

2 mins read
b051d294-2144-42ea-8a70-1ba515d181d4
டெஸ்லா நிறுவனத்தை தங்களுடைய விநியோகச் சங்கிலி வலை அமைப்பில் மிக முக்கியமான பங்குதாரராக இணைப்பதன் வாயிலாக, டாடா குழுமம் பல்வேறு அனைத்துலக ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமும் இந்தியாவின் டாடா குழும நிறுவனங்களும் வர்த்தகக் கூட்டணி அமைத்துள்ளன.

டெஸ்லா தற்போது மின்சாரக் கார் உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், அனைத்துலக வாகனத்துறையின் சந்தை மதிப்பில் பாதியளவைக் கொண்ட இரு நிறுவனங்கள் கூட்டணி அமைத்திருப்பது ஆகப்பெரிய வளர்ச்சிக்கான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் செயல்படத் தொடங்கினால் அதன் வர்த்தக வாய்ப்புகளை டாடா ஆட்டோகாம்ப், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா டெக்னாலஜிஸ், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிலைநிறுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லா நிறுவனத்தை தங்களுடைய விநியோகச் சங்கிலி வலை அமைப்பில் மிக முக்கியமான பங்குதாரராக இணைப்பதன் வாயிலாக, டாடா குழுமம் பல்வேறு அனைத்துலக ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. இவை இரண்டு பில்லியன் டாலர் மதிப்புள்ளவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியைத் தொடங்கியதும் மேலும் பல உள்நாட்டு நிறுவனங்கள் பேரளவில் பயனடையும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது மின்சாரக் கார் உற்பத்திக்கான பல்வேறு உதிரிப் பாகங்களை சீனா, தைவானில் இருந்துதான் டெஸ்லா நிறுவனம் கொள்முதல் செய்துவருகிறது.

அதை மாற்றி வேறு நாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்வது குறித்து டெஸ்லா தரப்பில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவாகவே, இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை அது ஈடுபட்டுள்ளதாகச் சந்தைப் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் எங்கு தனது உற்பத்தி ஆலையை அமைப்பது குறித்தும் டெஸ்லா நிறுவனம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக இந்து ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்