டெல்லியில் தொடர் போராட்டங்களால் வர்த்தகர்களுக்கு ரூ.2,000 கோடி இழப்பு

டெல்லியில் தொடர் போராட்டங்களால் வர்த்தகர்களுக்கு ரூ.2,000 கோடி இழப்பு

கோப்புப் படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

13 Oct 2026 - 6:12 pm

1 mins read

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக சுமார் ரூ.2,000 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் பல பகுதிகளில் உள்ள கடைகளையும் வணிக வளாகங்களையும் மூடுமாறு உள்ளூர் அதிகாரிகளும் காவல்துறையினரும் அறிவுறுத்தினர்.

காவல்துறையின் இந்த அவசர நடவடிக்கையால் பல முக்கியச் சந்தைகளில் வர்த்தகம் முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக டெல்லி முழுவதும் சுமார் ரூ.2,000 கோடிக்கும் அதிகமான வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல், காவல் ஆணையருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், தற்போது நவராத்திரி, ராம்லீலா கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்து வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது என்றும் இத்தகைய முக்கியமான தருணத்தில் கடைகளைக் கட்டாயப்படுத்தி மூடச் சொல்வது வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, போராட்டங்களின்போது வர்த்தகர்களைக் கடைகளை மூடுமாறு வற்புறுத்தக் கூடாது என்றும் வர்த்தக வளாகங்கள் பாதுகாப்பாக இயங்கத் தேவையான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல்துறை செய்து தர வேண்டும் என்றும் திரு பிரிஜேஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
டெல்லிஇண்டியாஎஸ்ஐஆர்போராட்டம்தேர்தல் ஆணையம்கடைவணிகர்காவல்துறைவர்த்தகம்