சண்டிகர்: நல்ல விளைச்சலைக் கொடுத்து சிறப்பான அறுவடைக்கு உதவியாக இருந்த இயற்கைக்கும் கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா ‘அறுவடைத் திருவிழா’ ஆகும்.
மக்களின் உணவில் முக்கிய பங்கு வகிக்கும் பயிர்களின் அறுவடையின்போது நடைபெறும் இத்திருவிழாக்கள், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த பகுதியின் காலநிலை, பயிர்களின் அறுவடைக்காலம் ஆகியவற்றிற்கேற்ப வெவ்வேறு நாள்களில் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோல் மற்ற மாநிலங்களில் பிஹு, மகர சங்கராந்தி, லோஹ்ரி என பல்வேறு பெயர்களில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இதில், லோஹ்ரி என்பது பஞ்சாப் மாநிலத்தில் பாரம்பரிய இசை, நடனம் ஆகியவற்றுடன் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான அறுவடைத் திருவிழாவாகும். லோஹாடி அல்லது லால் லோய் என்று அழைக்கப்படும் இப்பண்டிகை திங்கட்கிழமை (ஜனவரி 13) கொண்டாடப்படுகிறது. குளிர்காலத்திற்கு முன்பு விதைக்கப்பட்ட பயிர்களை நன்றாக அறுவடை செய்யவும் விவசாய செழிப்புக்காகவும் மக்கள் சூரியக் கடவுளையும் நெருப்புக் கடவுளையும் இப்பண்டிகையின்போது மக்கள் வழிபடுகின்றனர்.
நெருப்புக் கடவுளுக்கு எள், வெல்லம் மற்றும் சோளப்பொரி ஆகியவற்றை அவர்கள் படையலிடுகின்றனர்.
நெருப்பு மூட்டி அதை சுற்றி மக்கள் ஒன்றுகூடி, நாட்டுப்புற இசையின் தாளத்திற்கு ஏற்ப ஆடிப் பாடி மகிழ்கின்றனர். பாரம்பரிய லோஹ்ரி பாடல்களை பாடுவார்கள். குறிப்பாக, எள் மற்றும் வெல்லத்தால் செய்த இனிப்புகளை உண்டும் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கு அவற்றை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்துவர்.


