காஷ்மீர்: காஷ்மீரின் உயரமான பகுதிகள், சோனாமார்க் சுற்றூலாத் தலம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) முதல் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளது.
அதைக் காண அதிக எண்ணிக்கையிலான சுற்றுப்பயணிகள் அங்கு வருவர் என எதிர்பார்க்கப்படுவதோடு, அங்குச் சற்று சரிவில் இருக்கும் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க இது உதவும் என அவ்வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரின் மத்தியப் பகுதியில் இருக்கும் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க்கில் மிதமான பனிப்பொழிவு இருந்ததாக அவர்கள் கூறினர்.
அதனை ரசிக்க ஏராளமான பார்வையாளர்கள் வந்ததால் அங்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் தொடர்ந்து அப்பகுதியில் பனிப் பொழிவதால் ஏராளமான வாகனங்கள் நகர முடியாமல் சிக்கித் தவித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
நிலைமையைச் சீரமைக்க காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல் படையின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
காஷ்மீரின் வடக்குப் பகுதியில் இருக்கும் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பிரபலமான குல்மார்க் போன்ற பிற பிரபலமான பகுதிகளிலும் லேசான பனிப்பொழிவு ஏற்பட்டது.
பள்ளத்தாக்கின் உயர்ந்த பகுதிகளில் பனிப்பொழிவும் சமவெளிகளில் லேசான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.

