கோல்கத்தா: ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள செப்பு மின்கம்பி ஆலையில் தீப்பிடித்ததால் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், கோல்கத்தாவில் ரயில் சேவையும் சாலைப் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
அங்குள்ள பார்க் சர்க்கஸ் ரயில் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள அந்த உலோகக் கம்பி ஆலையில் திங்கட்கிழமையன்று (ஜனவரி 20) பிற்பகல் 3.20 மணியளவில் திடீரெனத் தீப்பற்றியது. இதனையடுத்து, அவ்வட்டாரம் முழுவதையும் கரும்புகை சூழ்ந்தது.
அந்த ஆலைக்கு அருகே நெகிழிப்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட மேலும் பல ஆலைகள் உள்ளன.
ஆலை தீப்பற்றி எரிவதைக் கண்ட அப்பகுதிவாசிகள் உடனடியாகக் காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தந்தனர்.
அதனைத் தொடர்ந்து, பத்துத் தீயணைப்பு வாகனங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்புப் படையினர் இரண்டு மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். உள்ளூர்வாசிகளும் தீயை அணைக்க உதவினர்.
இச்சம்பவத்தால் உயிருடற்சேதம் ஏதும் இல்லை. ஆயினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருலிருந்த சாலையிலும் ரயில் தடத்திலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனிடையே, ஒற்றைத் தளத்தில் செயல்படும் தமது ஆலை கடந்த ஐந்து நாள்களாக மூடப்பட்டிருந்தது என்றும் வேறு யாரோ கூரை வழியாகத் தீ வைத்திருக்கலாம் என்றும் ஆலையின் உரிமையாளர் கூறியுள்ளார்.
ஆயினும், தடயவியல் துறையினரின் ஆய்விற்குப் பிறகே ஆலையில் தீப்பற்றியதற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.