போக்குவரத்து விதிமீறல்: ஒரே நாளில் ரூ.1.13 கோடி வசூல்

1 mins read
5bb5c369-182a-4847-b2d4-fb1e5f36fc12
மும்பை சாலையின் பரபரப்பான போக்குவரத்து. - கோப்புப் படம்: ஊடகம்

மும்பை: மும்பையில் தஹி ஹண்டி யாத்திரையின்போது விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளுக்கு மொத்தம் ரூ.1.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஹி ஹண்டி என்பது கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடும் இந்து பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தியுடன் தொடர்புடைய ஒரு போட்டி நிகழ்வு ஆகும். கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த நாள் நடைபெறும் இந்நிகழ்வு வட மாநிலங்களில் மிகவும் பிரபலம். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிகழ்வின்போது மும்பையில் மட்டும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக காவல்துறை 10,000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்தது. இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1.13 கோடி அபராதமாக செலுத்தவிருக்கின்றனர்.

தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, தவறான திசையில் செல்லுதல், அதி வேகமாக வாகனத்தை செலுத்துவது போன்ற விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமே அதிகம். இதுகுறித்து பேசிய போக்குவரத்து இணை ஆணையர் அனில் கும்பாரே, “விதிகளை மீறுவோர் யார் என்பதை கண்டறிவதற்காக பல்வேறு இடங்களில் ஏராளமான கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி வைத்துள்ளோம். அவற்றின் மூலம் ஆராய்ந்து யார், யார் எல்லாம் விதிகளை மீறி இருக்கின்றனர் என்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்