புதுடெல்லி: போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவற்றை மீறும் போக்கும் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆயினும், மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான தொகையையே குற்றவாளிகள் அபராதமாகச் செலுத்தியதும் தெரியவந்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதித்த வகையில் ரூ.12,000 கோடி (S$1.816 பில்லியன்) செலுத்துச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக ‘கார்ஸ்24’ அறிக்கை தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட ரூ.9,000 கோடி அபராதம் இன்னும் செலுத்தப்படவில்லை என்றும் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்களே அபராதம் செலுத்தியுள்ளனர் என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளைக் கண்டுகொள்ளாதது போலவே, அபராதத்தை வசூலிப்பதிலும் செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்பதை இது காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.
சென்ற ஆண்டு நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 80 மில்லியன் செலுத்துச்சீட்டுகள் வழங்கப்பட்டன. அதாவது, இரண்டில் ஒரு வாகனம் என்ற வகையில் செலுத்துச்சீட்டுகள் வழங்கப்பட்டன. போக்குவரத்து விதிமீறல்களில் ஏறக்குறைய பாதி அதிவேகம் தொடர்பானவை. தலைக்கவசம், இருக்கைவார் அணியாதது, நிறுத்தக்கூடாத இடத்தில் வாகனத்தை நிறுத்தியது, போக்குவரத்து விளக்குகளைக் கண்டுகொள்ளாதது ஆகியவை அடுத்தடுத்த நிலைகளைப் பிடித்துள்ளன.
செலுத்துச்சீட்டுகளில் குறிப்பிட்டுள்ளபடி அபராதத்தைச் செலுத்தாவிடில் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதை அறிந்திருந்தும் 25 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே அபராதத்தைச் செலுத்தியுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் மட்டும் நாளொன்றுக்குக் குறைந்தது 4,500 அபராதச் செலுத்துச்சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் அபராதமாக ரூ.10 லட்சம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது தொடர்பில் நொய்டாவில் மாதந்தோறும் ஏறத்தாழ 300,000 பேர் பிடிபடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.