சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கடும் குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மூடப்பட்டிருந்த அறைக்குள் தீ மூட்டி உறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
வடமாநிலங்களான உத்தரப்பிரதேசம், பஞ்சாப், டெல்லி, பீகாரில் கடந்த சில நாள்களாகக் கடும் பனிப்பொழிவும், கடும் குளிரும் வாட்டி வருகிறது.
இதனால் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் சிரமங்களைச் சந்தித்து வரும் பொதுமக்கள், குளிரிலிருந்து தப்பிக்க பல்வேறு வழிமுறைகளையும் கையாண்டு வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம், தரன் தரன் மாவட்டத்திலுள்ள அலிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஷ்தீப் சிங் (21). இவரது மனைவி ஜஷந்தீப் கவுர் (20). இவர்களுக்கு குர்பாஸ் சிங் என்ற இரண்டு மாத ஆண் குழந்தை இருந்தது.
இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவியதால், வீட்டின் அறையை வெப்பமாக வைத்திருக்க நினைத்த அர்ஷ்தீப் சிங் விறகு அடுப்பில் கனல் மூட்டியுள்ளார்.
அந்த அறையில் இருந்து வெப்பம் வெளியேறாமல் இருக்க சன்னல்கள், கதவுகளை உட்புறமாகத் தாழிட்டுவிட்டு, தம்பதியர் தங்களது இரண்டு மாதக் குழந்தை, 10 வயது உறவுக்காரச் சிறுமியுடன் உறங்கினர்.
ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு நால்வரும் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு பதறிய அவர்கள், உடனடியாக அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அர்ஷ்தீப் சிங், அவரது மனைவி ஜஷந்தீப் கவுர், அவர்களது கைக்குழந்தை ஆகிய மூவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட 10 வயதுச் சிறுமி அமிர்தசரசில் உள்ள குரு நானக் தேவ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட அறைக்குள் தீ மூட்டியதால் ஏற்பட்ட நச்சுப் புகையினால் (கார்பன் மோனாக்சைட்) மூச்சுத்திணறல் ஏற்பட்டு இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில், அமிர்தசரசின் ஜாண்டியால் சாலைப் பகுதியில் ஒரு தம்பதியரும் இதேபோல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். அந்தத் தம்பதியரும் தங்களது படுக்கையறையில் விறகுகளை எரித்துக் குளிர் காய்ந்தபோது இந்த விபரீதம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

