பீகாரில் துயரச் சம்பவம்: கூட்ட நெரிசலில் மிதிபட்டு ஏழு பக்தர்கள் மரணம்

பீகாரில் துயரச் சம்பவம்: கூட்ட நெரிசலில் மிதிபட்டு ஏழு பக்தர்கள் மரணம்

2 mins read
7c9a07af-ecd9-474e-b30e-0ece2493376b
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு லஹிசாராய் சர்தார் மருத்துவமனையிலும் அருகிலுள்ளமருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். - படம்: என்டிடிவி
Google News Preferred Icon

பாட்னா: பீகாரில் உள்ள ஒரு கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துவிட்டனர்.

அந்தத் துயரச் சம்பவம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) காலை நிகழ்ந்தது.

வடஇந்தியர்களின் நாட்காட்டிப்படி இது ஸ்ராவன் மாதம். அந்த மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையன்று காலையில் லஹிசாராய் என்னும் இடத்தில் உள்ள அசோக் தாம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. காலையிலேயே ஏறத்தாழ 50,000 பேர் திரண்டிருந்ததாக தகவல் ஒன்று தெரிவித்தது.

திடீரென்று அந்தக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, பலர் கீழே விழுந்தனர். அப்படி விழுந்தவர்கள் மீது பலர் மிதித்து ஓடினர். அதில் நசுங்கி பலர் மாண்டனர்.

உடனடியாகக் கிடைத்த தகவலின்படி ஏழு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவத்தை அறிந்ததும் மீட்புப் பணிகள் அவசரமாகத் தொடங்கின.

அந்தச் சம்பவம் குறித்து லஹிசாராய் மாவட்ட ஆட்சித் தலைவர் சைலேந்திர குமார் விளக்கினார்.

“கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுடன் காலை 6.30 முதல் 6.45 மணிக்குள் இரண்டு ரயில்கள் அடுத்தடுத்து வந்து சேர்ந்ததால் பக்தர்களின் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்தது. அதனால், கோயிலுக்கு வெளியே போடப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகள் சரிந்தன.

“அதனால், ஒருவர் மீது மற்றொருவர் விழுந்தனர்.

“அத்துடன், ஆண்கள் வரிசையில் இருந்த மின்கம்பம் ஒன்று சாய்ந்து விழுந்தது. அதனால், மின்கம்பிகள் அறுந்து அபாயம் ஏற்பட்டதாக வதந்தி கிளம்பியது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பீதியுடன் ஓடத் தொடங்கினர். பெண்கள் வரிசையிலும் நெரிசல் ஏற்பட்டது. அதனால், பலர் கீழே விழுந்தனர்.

“ஆனால், அறுந்து விழுந்தது அபாயம் இல்லாத கம்பிவடம்தான்; மின்கம்பி அல்ல என்பது பின்னர் தெரியவந்தது,” என்றார் சைலேந்திர குமார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு லஹிசாராய் சர்தார் மருத்துவமனையிலும் அருகில் உள்ள மற்ற மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்