சென்னை: கவரைப்பேட்டையில் நடைபெற்ற பாக்மதி விரைவு ரயில் விபத்தின்போது, மிகச் சாதுர்யமாகச் செயல்பட்ட ரயில் ஓட்டுநர் சுப்பிரமணி உட்பட 11 பேருக்கு ‘விசிஷ்ட ரயில் சேவா’ விருதுகள் வழங்கப்பட்டன.
இந்திய ரயில்வேயில் கடந்த ஆண்டு சிறப்பாகப் பணியாற்றிய 100 அதிகாரிகள், ஊழியர்களுக்கு, ‘விசிஷ்ட ரயில் சேவா புரஸ்கார்’ விருதை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கி கௌரவித்தார்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவிற்குப் புறப்பட்ட பாக்மதி அதிவிரைவு ரயில், கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 19 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையரக அதிகாரிகள், “பாக்மதி அதிவிரைவு ரயிலை இயக்கிய ஓட்டுநர் சுப்பிரமணி, விபத்து நேரப் போவதை உணர்ந்து துரிதமாகச் செயல்பட்டு அவசர கால பொத்தானை அழுத்தினார். அதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது,” என அறிக்கை அளித்தனர்.
அவரது அந்த சமயோசித செயலைப் பாராட்டி, அவருக்கு உயரிய விருதான ‘விசிஷ்ட ரயில் சேவா புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

