புதுடெல்லி: இந்தியாவின் முதல் 508 கி.மீ. நீளமுள்ள மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதை திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நிலத்தடி ரயில் நிலையம், கடலுக்கு அடியிலான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் முதல் கடல்சார் ரயில் சுரங்கப்பாதையை அமைப்பதற்காக, தானே சிற்றோடைக்கு அடியில் உள்ள பாறைகளைத் துளையிடும் பணியில் 3,200 டன் எடையுள்ள சுரங்கத் துளையிடும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா வளாகத்தில், 10 அடுக்குமாடிக் கட்டடத்தின் உயரத்தை விட அதிக ஆழத்தில் ஒரு நிலத்தடி ரயில் நிலையத்தை ரயில்வே அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர்.
இந்த நிலையம், இந்த வழித்தடத்தின் தொடக்கப் புள்ளியாகச் செயல்படும். “மும்பையின் வர்த்தக மையப்பகுதியில், இந்த வழித்தடத்திலேயே ஒரே ஒரு நிலத்தடி நிலையத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இது பொறியியல் ரீதியாக ஒரு தனித்துவமான சாதனையாகும்,” என்று திரு வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்த நிலத்தடி நிலையம் மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்கும். இதில் பயணிகள் நடைமேடைகள், பொது வளாகம், அத்தியாவசியச் சேவைகளுக்கான இடங்கள் அமையும். இங்குள்ள ஆறு நடைமேடைகளில் ஒவ்வொன்றும் 400 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை என்பதால், இவை அதிவேக ரயில்களைக் கையாளும் திறன் கொண்டவையாக இருக்கும்.
இந்த வழித்தடத்தில் உள்ள மற்ற நிலையங்கள், அந்தந்த நகரங்களின் தனித்துவமான அடையாளம், கலாசாரம், பொருளியல் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வைரத் தொழிலுக்குப் புகழ்பெற்ற சூரத் நகரில் அமையவுள்ள நிலையத்தின் முகப்பு, வைரங்களின் வடிவத்தால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் அதிவேக ரயில் பயணம் சூரத்திலிருந்து வாபி வரை மேற்கொள்ளப்படும்.
