இந்தியாவில் திருனர் ஜோடி ஒன்றுக்கு கூடியவிரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. மகப்பேறு காலத்தில் பல பெண்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் போன்றே அவர்களும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இந்தப் படங்கள் இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
ஸியா, 21, ஸஹாத், 23 ஆகிய இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். பிறக்கும்போது ஆணாக பிறந்த ஸியா பெண்ணாகவும், பெண்ணாக பிறந்த ஸஹாத் ஆணாகவும் மாற சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில் ஸஹாத் கர்ப்பமடைந்ததால், சிகிச்சையை அவர்கள் ஒத்திவைத்துள்ளனர்.
இந்த ஜோடி மூவாண்டுகளுக்கு முன்னர் சந்தித்தனர். இருவரின் பெற்றோர் அவர்களின் நிலையை ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். ஆனால் ஸஹாத் கருவுற்றதை அறிந்த அவருடைய பெற்றோர் தம்பதிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ஸஹாத்தின் தாயாரின் அனுமதியோடு தங்களுக்கு குழந்தை பிறக்கவிருப்பதை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தனர். தம்பதிக்கு பலரும் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

