ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடங்களில் போக்குவரத்துத் தொண்டூழியர்களாகத் திருநங்கையரைப் பணியமர்த்தும்படி அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் நிறுவப்பட்டுள்ள இடங்களில் விதிமீறலைத் தடுக்கும் வகையில், அங்குக் காவலர்களாக திருநங்கையரின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுடனான சந்திப்பின்போது முதல்வர் ரேவந்த் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், போதையில் வாகனம் ஓட்டுகின்றனரா என்பதைச் சோதிக்கும் பணிகளிலும் திருநங்கையரை ஈடுபடுத்தலாம் என்று முதல்வர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துக் காவல் பணியில் அமர்த்தப்படும் திருநங்கையர்க்கென சிறப்பு உடை வரைமுறையையும் (dress code) ஊதியத்தையும் இறுதிசெய்யும்படியும் திரு ரேவந்த் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கூடிய விரைவில், முன்னோட்ட முறையில் அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.