மும்பை: பிருகான்மும்பை மின்விநியோக, போக்குவரத்து (பெஸ்ட்) நிறுவன ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.
இதனால், மும்பை மாநகரின் பொதுப் போக்குவரத்துச் சேவை முடங்கியதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“பல இடங்களில் பேருந்துகள்மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இப்போதைக்கு, 32 பேருந்துகள் மட்டுமே சாலைகளில் இயங்குகின்றன,” என்று ‘பெஸ்ட்’ பேச்சாளர் தெரிவித்தார்.
‘பெஸ்ட்’ நிறுவனத்தின்கீழ் கிட்டத்தட்ட 2,700 பேருந்துகள் இயங்குகின்றன. அவை 27 பணிமனைகளிலும் பேருந்து நிலையங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 249 பேருந்துகள் மட்டுமே அந்நிறுவனத்திற்குச் சொந்தமானவை. எஞ்சிய பேருந்துகள் தனியார் ஒப்பந்ததாரர்களால் இயக்கப்படுபவை.
இந்நிலையில், ‘பெஸ்ட் கூட்டு ஊழியர்கள் செயற்குழு’ விடுத்த வேலைநிறுத்த அழைப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே பேருந்துகள் இயக்கப்படவில்லை.
“இதுவரையிலும் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக இருந்து வருகிறது. எந்தப் பணிமனையிலிருந்தும் பேருந்துகள் கிளம்பவில்லை,” என்று அச்செயற்குழுவின் தலைவரான உதய் அம்போன்கர் கூறினார்.
தனியார் ஒப்பந்தங்களின்கீழ் இயங்கும் பேருந்துகளின் ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒப்பந்தப் பேருந்துகளின் ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்குதல், ‘பெஸ்ட்’ நிறுவனத்தின்கீழ் 5,000 பேருந்துகளைக் கொள்முதல் செய்தல், ஆட்சேர்ப்பு, மூத்த ஊழியர்களுக்கு பணி உயர்வு, ‘பெஸ்ட் சொத்துகளை விற்காதிருத்தல் அல்லது நீண்டகாலக் குத்தகைக்கு விடாதிருத்தல் ஆகிய கோரிக்கைகளைத் தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், ‘பெஸ்ட்’ நிறுவனத்தின் வரவுசெலவுத் திட்டத்தை மும்பை மாநகராட்சி வரவுசெலவுத் திட்டத்துடன் ஒன்றிணைக்கவும் அவை வலியுறுத்துகின்றன.
முன்னதாக, தொழில்சார் நீதிமன்றம் வியாழக்கிழமை மாலை ‘பெஸ்ட்’ நிறுவனத்திற்கு ஆதரவாக இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, ‘பெஸ்ட்’ ஊழியர்களும் ஒப்பந்தப் பேருந்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

