அந்நியச் செலாவணியைச் சேமிக்க பயண, எரிபொருள் கட்டுப்பாடு அவசியம்: மோடி

அந்நியச் செலாவணியைச் சேமிக்க பயண, எரிபொருள் கட்டுப்பாடு அவசியம்: மோடி

படம்: என்டிடிவி

11 May 2026 - 3:59 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியக் குடிமக்கள் எரிபொருளைச் சேமிக்க வேண்டும் என்றும் மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காகக் குறைந்தபட்சம் அடுத்த ஓராண்டுக்கு அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொள்ளுமாறும் குடிமக்களுக்கு இந்தியப் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

திருமணங்களின்போது தங்கம் வாங்க பேரளவில் செலவிடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

‘கொவிட்-19’ பெருந்தொற்றுக் காலத்தில் பின்பற்றிய வீட்டிலிருந்தபடியே பணிபுரியும் முறை, இணையவழிக் கூட்டங்களுக்குத் திரும்புவதற்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்வது எரிபொருள் சேமிப்புக்குக் கைகொடுக்கும் என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.

எண்ணெய் இறக்குமதியிலும் நுகர்வோர் எண்ணிக்கையிலும் உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா.

தற்போதைய சூழலில் உலகின் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. எனினும் இந்திய அரசு விலையை உயர்த்தவில்லை. இதற்கான திட்டம் ஏதும் இல்லை எனவும் கடந்த மாத இறுதியில் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல், சமையல் எண்ணெய் பயன்பாட்டையும் குறைக்குமாறு இந்தியக் குடும்பங்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது ஓர் ஆரோக்கியமான நடவடிக்கை என்றும் தேசபக்தியை வெளிப்படுத்தக் கூடியது என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் காரணமாக உலகெங்கும் எண்ணெய் விலை அதிகரித்திருப்பதால் வீட்டிலிருந்தபடி பணியாற்றுவது அவசியமாகிறது என்று அவர் குறிப்பிட்ட நிலையில், இந்தியா தனது உள்நாட்டு எரிபொருள் நுகர்வை 20 விழுக்காடு அளவுக்குக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், இந்திய அரசின் இந்த நடவடிக்கை அதன் தோல்வியை வெளிப்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்