திருவனந்தபுரம்: தமிழ்நாடு - கேரள எல்லையில் உடலில் காயங்களோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த சில நாள்களாக கேரள எல்லைப் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் இருந்து யானை எந்தப் பகுதிக்கும் செல்லாமல் தண்ணீருக்குள்ளேயே நின்று கொண்டிருப்பதைப் பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
உடனடி நடவடிக்கையில் இறங்கிய இரு மாநில வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், அதனுடைய உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அதனைத்தொடர்ந்து தமிழக வனத்துறை மருத்துவக்குழுவினர் அந்த யானைக்குப் பிடித்த உணவுகள் மூலமாக நோய் எதிர்ப்பு மருந்துகளும் ஊட்டச்சத்து மருந்துகளும் வழங்கி வருகிறார்கள்.
காட்டு யானை மருத்துவக்குழுவினர் அளிக்கும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு தருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், யானை தண்ணீருக்கு வெளியே வந்தால்தான் அதனுடைய காயங்களுக்கு ஏற்ற மருந்துகளைக் கொடுக்க முடியும் என்று கூறுகின்றது மருத்துவக் குழு.