பாட்னா: இயற்கையைப் பாதுகாப்பதாக நினைத்துக்கொண்டு, பொதுமக்களின் உயிரோடு பீகார் அரசு விளையாடுவதாக புகார் எழுந்துள்ளது.
அங்கு முக்கியச் சாலையின் நடுவே உள்ள மரங்களை வெட்டாமல், நூறு கோடி ரூபாய் செலவில், புதிய சாலை போடப்பட்டுள்ளது. ஆனால், அச்சாலையின் நடுவே உள்ள மரங்கள் எதுவும் வெட்டப்படவில்லை.
பளபளவெனக் காட்சியளிக்கும் சாலையில் ஆங்காங்கே மரங்கள் ஒழுங்கற்ற முறையில், குறுக்கும் நெடுக்குமாகக் காணப்படுகின்றன. இதுதான் சமூக ஆர்வலர்களின் புகாருக்கும் கோபத்துக்கும் காரணம்.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து, 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெஹனாபாதில் அண்மையில் சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இச்சாலையில் செல்லும் மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று சில தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஜெஹனாபாத் மாவட்ட நிர்வாகம், சாலையில் உள்ள மரங்களை வெட்ட வனத்துறையிடம் அனுமதி கோரியதாகவும் அதற்கு வனத்துறை 35 ஏக்கர் நிலத்தை இழப்பீடாகக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம், சாலையின் ஓரத்திலும் நடுவிலும் உள்ள மரங்களை வெட்டாமலேயே மீதமுள்ள பகுதிகளில் சாலைப் பணிகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
இருசக்கர வாகனங்கள் வேண்டுமானால் தப்பிக்கலாம். இந்தச் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் சென்றால் விபத்தில் சிக்குவது நிச்சயம் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.