மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் ஏற்பட்ட லேசான நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் பீதியடைந்தனர்.
சனிக்கிழமை (ஜூலை 8) இரவு 10 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டராகப் பதிவாகியுள்ளது.
இதனால் நாசிக்கிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) காலை 5.33 மணிக்கு மேலும் ஒருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இம்முறை அது ரிக்டர் அளவுகோலில் 3.3 புள்ளிகளாகப் பதிவானது.
மகாராஷ்டிரா- குஜராத் மாநிலங்களின் எல்லையை ஒட்டிய ஹாட்காட் மலைப்பகுதிக்கு அருகே உள்ள பான்வட் பகுதியில், பூமிக்குக் கீழே 5 கிலோமீட்டர் ஆழத்திற்கு இந்த நில அதிர்வு மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அதிர்வுகள் ஏற்பட்டபோது பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். உயிருடற்சேதம் ஏதும் பதிவாகவில்லை.
மேலும், நாசிக் வட்டாரத்தில் உள்ள அணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதியானது.
இந்நிலையில், நில அதிர்வு குறித்து பொதுமக்கள் அஞ்சத் தேவையில்லை என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் நாசிக் மாவட்ட ஆட்சியர் ஆயிஷ் பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாசிக் மாவட்டத்தில் கடந்த ஜூலை 25 முதல் 28ஆம் தேதிவரை நான்கு முறையும் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஒருமுறையும் நில அதிர்வுகள் பதிவாகியிருந்தன.


