எரிபொருள் விலையால் உயரும் பயணப் பகிர்வு

எரிபொருள் விலையால் உயரும் பயணப் பகிர்வு

2 mins read
caee98d2-d0b3-4c6d-8096-3a9f517a9551
அதிகரித்துவரும் எரிசக்திக் கட்டணங்களால் 2026ல் கூடுதலாக 600,000 ஓட்டுநர்கள் தங்கள் செயலியில் இணைந்துள்ளதாக பிளாபிளாகார்’ (BlaBlaCar) தெரிவித்துள்ளது. - படம்: ஏஎஃப்ஃபி

புதுடெல்லி: மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு, ‘கார்பூலிங்’ (carpooling) எனப்படும் பயணங்களின் பகிர்வைக் கணிசமாக அதிகரிக்கச் செய்துள்ளது.

மலிவான கட்டணத்தில் பயணம் செய்ய விரும்பும் புதிய பயனீட்டாளர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளதாகப் பகிர்வுப் பயணச் செயலி ஒன்று தெரிவித்துள்ளது.

அதிகரித்துவரும் எரிபொருள் கட்டணங்களைச் சமாளிக்கப் பயணிகள் மாற்று வழிகளைத் தேடுவதால், உலகின் மிகப்பெரிய பகிர்வுப் பயணத் தளமான ‘பிளாபிளாகார்’ (BlaBlaCar) செயலியில் இவ்வாண்டு கூடுதலாக 600,000 ஓட்டுநர்கள் இணைந்துள்ளனர்.

தொடக்கத்தில் கணிக்கப்பட்டதைவிட இந்த எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகமாகும் என்று பிளாபிளாகார் நிறுவனம் கூறியது.

2025ல் 20 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் பிளாபிளாகாரின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, இச்சேவையில் இணைந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 40 விழுக்காடு அதிகரித்துள்ளது.

(Benjamin Retourne), 2025ல் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் அத்தளம் சாதனை அளவிலான புள்ளிவிவரங்களைப் பதிவு செய்திருப்பதாகத் தளத்தின் தயாரிப்பு இயக்குநர் திரு. பெஞ்சமின் ரெட்டூர்னே தெரிவித்தார்.

19 மில்லியன் பயனர்களைக் கொண்ட பிரேசில், ஏழு மில்லியன் பயனர்களைக் கொண்ட பிரான்ஸ் ஆகிய நாடுகளை இந்தியா முந்திக்கொண்டுள்ளது.

நகரங்களுக்கு இடையே ஒன்றாகப் பயணம் செய்து கட்டணத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் ஓட்டுநர்களையும் பயணிகளையும் இந்தத் தளம் இணைக்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மே மாதத் தொடக்கத்தில், நாட்டின் 1.4 பில்லியன் மக்கள் இவ்வாறு பயணங்களைப் பகிர்ந்தும், பொதுப் போக்குவரத்தையும் அதிகமாகப் பயன்படுத்தி எரிபொருளைச் சேமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியா தனது கச்சா எண்ணெய்த் தேவையில் கிட்டத்தட்ட பாதியை ஹோர்முஸ் நீரிணை வழியாக இறக்குமதி செய்கிறது.

பிப்ரவரியில் தொடங்கப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அதனை மூடியது.

பத்தாண்டுகளுக்கு முன்பு பிளாபிளாகார் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் மக்களின் வரவேற்பு குறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

2006ல் பிரான்சில் தொடங்கப்பட்ட அந்தச் சேவைப் பகிர்வு நிறுவனம், இந்தியாவில் முதலீடு செய்வதை நிறுத்தியது.

இருந்தபோதும், நாட்டின் பொருளியல் வளர்ச்சி, மின்னிலக்கப் பயன்பாட்டு வளர்ச்சி, மக்களிடையே பகிரப்படும் தகவல்கள் ஆகியவற்றால் கொவிட்-19 கிருமித்தொற்றுக்குப் பிறகு அதன் வளர்ச்சி மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்