மோட்டார்சைக்கிள் விபத்து: பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இருவர் உயிரிழப்பு (காணொளி)

1 mins read
279692fb-fe94-4b8a-9322-ef23167e1bfc
மேம்பாலத்தின் விளிம்புச்சுவரில் மோதும் மோட்டார்சைக்கிள். - காணொளிப்படம்: எக்ஸ்

விசாகப்பட்டினம்: அதிவேகத்தில் சென்ற மோட்டார்சைக்கிள் மேம்பாலத்தின் விளிம்புச்சுவர்மீது மோதி விபத்துக்குள்ளானதில், அதில் சென்ற மூவரில் இருவர் 40 அடி உயரத்திலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டு, உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இந்தியாவின் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 12) நிகழ்ந்தது.

இவ்விபத்து தொடர்பில் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளி இப்போது இணையத்தில் பரவலாகி வருகிறது.

அந்த இளையர்கள் மூவரும் பிறந்தநாள் விருந்தில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பியபோது விபத்து நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயினும், அவர்கள் மது அருந்தியிருந்தனரா இல்லையா என்பது தெரியவில்லை.

இவ்விபத்தில் தனவரப்பு குமார், ஏ. பவன் குமார் என்ற இரு இளையர்கள் மாண்டுவிட்டனர். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

விபத்து நிகழ்ந்த மேம்பாலம், கனரக வாகனங்களுக்கு மட்டுமானது என்றும் அதில் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்த அனுமதியில்லை என்றும் கூறப்படுகிறாது.

அதுகுறித்த அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளபோதும், மோட்டார்சைக்கிளில் சென்ற இளையர்கள் அதனைக் கவனிக்கவில்லையா அல்லது புறக்கணித்துவிட்டுச் சென்றனரா என்பது தெரியவில்லை.

சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்