எய்ட்ஸ் தொற்றால் 47 மாணவர்கள் மரணம்; விழிப்புநிலையில் இந்திய மாநிலம்

2 mins read
02748fc2-5ce0-46be-8439-793f92250a7f
எச்ஐவி தொற்றிய திரிபுரா மாநில மாணவர்களில் பலர், உயர்கல்விக்காக வேறு இந்திய மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. - மாதிரிப்படம்: ஊடகம்

அகர்தலா: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் எச்ஐவி தொற்றால் 47 மாணவர்கள் உயிரிழந்துவிட்டதாக வெளியான தகவல் பேரதிர்ச்சி அளித்துள்ளது.

திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் உயரதிகாரி ஒருவரைச் சுட்டி, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் புதிதாக ஐந்து முதல் ஏழு பேருக்கு எச்ஐவி தொற்று கண்டறியப்படுவதால் நிலைமை மோசமாகி வருவதாகச் சொல்லப்படுகிறது.

“இதுவரை 828 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 572 பேர் உயிருடன் உள்ளனர்; 47 பேர் இறந்துவிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்களில் பலர் மேற்படிப்பிற்காகத் திரிபுராவைவிட்டு வெளியேறி, வேறு பல மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனர்,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பானது, 220 பள்ளிகளிலும் 24 உயர்கல்வி நிலையங்களிலும் போதை ஊசி போட்டுக்கொள்ளும் மாணவர்களை அடையாளம் கண்டுள்ளது. போதைப்பொருள் பழக்கமே எச்ஐவி தொற்று அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

மாநிலம் முழுவதுமுள்ள 164 சுகாதார நிலையங்களிலிருந்து இத்தரவு சேகரிக்கப்பட்டுள்ளது.

2024 மே மாத நிலவரப்படி, திரிபுராவில் மொத்தம் 8,729 பேர் எச்ஐவி போன்ற சுழல் நச்சுயிரி (ரெட்ரோவைரஸ்) தொற்றுத் தடுப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திரிபுராவில் இப்போது எச்ஐவி தொற்றுடன் 4,570 ஆண்கள், 1,103 பெண்கள், ஒரு திருநங்கை என 5,764 பேர் உயிருடன் உள்ளனர்.

“பாதிக்கப்பட்டோரில் பலரும் பணக்காரக் குடும்பத்துப் பிள்ளைகள். பெற்றோர் இருவரும் அரசாங்கப் பணியில் இருக்கும் பல குடும்பங்களில் பிள்ளைகளுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கிறது. தங்கள் பிள்ளைகள் போதையின் பிடியில் சிக்கியிருப்பது பெற்றோருக்குத் தெரியவரும்போது, நிலைமை கைமீறிச் சென்றுவிடுகிறது,” என்று திரிபுரா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பில் உயரதிகாரியாக இருக்கும் பட்டாச்சார்ஜி கூறினார்.

குறிப்புச் சொற்கள்