தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உ.பி. சிறைக்குக் கொண்டு வரப்பட்ட திரிவேணி சங்கம நீர்

2 mins read
புனித நீராடிய 90 ஆயிரம் கைதிகள்
5b7b4d7c-2239-45cb-ad3a-c52aecad4ed5
திரிவேணி சங்கம தண்ணீர் வழக்கமான நீரில் கலந்து சிறிய தொட்டிகளில் சேமிக்கப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

லக்னோ: உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மூன்று நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமம்’ என்ற இடத்தில் ஜனவரி 13-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். இதுவரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலச் சிறைத்துறை அதிகாரிகள் திரிவேணி சங்கமத்தின் புனித நீரை லக்னோ, அயோத்தி, அலிகார் சிறைகளுக்குக் கொண்டு வந்தனர். உ.பி. முழுவதும் உள்ள 75 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 90 ஆயிரம் கைதிகள் மகா கும்பமேளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரில் நீராடினர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “திரிவேணி சங்கமம் தண்ணீர் வழக்கமான நீரில் கலந்து சிறிய தொட்டிகளில் சேமிக்கப்பட்டது. கைதிகள் புனித நீராடவும், சிறையிலேயே பிரார்த்தனை செய்யவும் அனுமதிக்கப்பட்டனர்,” என்று கூறினார்.

லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறைத்துறை அமைச்சர் தாரா சிங் சவுகான் கூறுகையில், “சுமார் 90 ஆயிரம் கைதிகள் புனித நீராடினர். கைதிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது,” என்று கூறினார்.

மேலும் சிறைக் கண்காணிப்பாளர் உதய் பிரதாப் மிஸ்ரா கூறும்போது, சிறையில் 757 கைதிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மகா கும்பமேளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரில் புனித நீராடினர். மேலும், அவர்கள் கருத்து வேறுபாடு இல்லாமல் புனித நீராடியதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்