தரவுகளை மீட்பதில் சிக்கல்: அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஏர் இந்தியா கறுப்புப் பெட்டி

1 mins read
1df146c9-d0aa-46a0-a260-cac984349dd7
அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மின்னிலக்க அமைப்பு இருப்பதால், கறுப்புப் பெட்டியில் உள்ள தரவுகளை எப்படியாவது மீட்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஊடகம்

அகமதாபாத்: கடந்த வாரம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ரக விமானத்தின் கறுப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு கறுப்புப் பெட்டியின் இரண்டு முக்கியமான பாகங்கள் இடிபாடுகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டன.

அவற்றில் உள்ள தரவுகளின் உதவியோடுதான் விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய முடியும் என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், விமான விபத்தின்போது அதில் இருந்த கறுப்புப் பெட்டியின் வெளிப்புறம் கடுமையாக சேதமடைந்துள்ளது என்றும் அதிலிருந்து இந்திய நிபுணர்களால் தரவுகளை எடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தில் (AAIB) நவீன கருவிகள் இல்லாத காரணத்தால் தரவுகளை மீட்டெடுக்க முடியாத நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திற்கு (NTSB) கறுப்புப் பெட்டியை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

அங்கு அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மின்னிலக்க அமைப்பு இருப்பதால், கறுப்புப் பெட்டியில் உள்ள தரவுகளை எப்படியாவது மீட்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரவுகள் மீட்கப்பட்ட பின்னர் அவை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

இந்த நடைமுறை முழுமையடைய இரண்டு நாள்கள் முதல் ஓரிரு மாதங்கள் ஆகக்கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்