புனே: மகாராஷ்டிர மாநிலத்தில் லாரி ஒன்று திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து முக்கால்வாசி புதைந்தது.
புனே மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) மாநகராட்சிக்குச் சொந்தமான தண்ணீர் லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது.
அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கியது. மின்னல் வேகத்தில் பின்புறமாக தலைகீழாக சாலைக்குள் அந்த லாரி புதைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
லாரியில் இருந்த ஓட்டுநர் உடனடியாக வெளியேறி தப்பினார். அதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், பள்ளத்தில் சிக்கிய டேங்கர் லாரியை வெளியே கொண்டுவந்து மீட்டனர். புனே மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று திடீர் பள்ளத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

