ஆக்ரா: கோழிகளை ஏற்றிச் சென்ற சரக்குந்து விபத்துக்குள்ளானதால் பல குடும்பங்களுக்கும் எதிர்பாராத விருந்து கிடைத்தது.
இந்தியாவின் வடமாநிலங்களில் புதன்கிழமை காலையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்குக் கடும் பனிமூட்டம் இருந்தது.
இதன் காரணமாக, உத்தரப் பிரதேசம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கின. அதில் ஒருவர் இறந்துவிட்டார் என்றும் பலர் காயமுற்றனர் என்றும் தகவல்கள் கூறின.
காயமடைந்தவர்கள் விரைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீராக்க பாரந்தூக்கி ஒன்று அழைக்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய வாகனங்களில் கோழிகளை ஏற்றிச் சென்ற ஒரு சரக்குந்தும் அடங்கும். அவ்வாகனம் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும் பலரும் அங்கு விரைந்து சென்று, கோழிகளை அள்ளிச் சென்றனர்.
முடிந்த அளவிற்குச் சுருட்ட வேண்டும் என்ற நோக்கில் சிலர் சாக்குப் பைகளைக் கொண்டுவந்ததாகவும் கூறப்பட்டது.
இரு சக்கர வாகனங்கள் வைத்திருந்த சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அங்கு வந்து, கோழிகளை அள்ளிச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
அந்தச் சரக்குந்தில் ரூ.150,000 மதிப்புடைய 500 கோழிகள் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

