வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 விழுக்காடு வரை இறக்குமதிவரி விதிப்பதற்கான அதிகாரத்தை வழங்கும் ‘லிண்ட்சே ஓ. கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ல் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) கையெழுத்திட்டுள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 விழுக்காட்டுக்கும் அதிகமான பங்கை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது.
மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதியளவை தற்போது ரஷ்யாவே வழங்கி வருகிறது.
ஹோர்முஸ் நீரிணையில் இருந்து பாப் எல்-மண்டேப் வரை பரவியுள்ள மேற்கு ஆசிய மோதல்களுக்கு மத்தியில், அனைத்துலக எரிசக்திச் சந்தையில் நெருக்கடி நிலவுகிறது.
இப்படிப்பட்டதொரு சூழலில், இந்தச் சட்டத்தின் விதிகளை டிரம்ப் நிர்வாகம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதை பொருளியல் ஆய்வாளர்கள் உற்றுநோக்குகின்றனர்.
கடந்த ஆண்டு அமெரிக்கா முன்வைத்த மசோதாவில், ரஷ்ய எரிபொருளை வாங்கும் நாடுகள் மீது 500 விழுக்காடு சுங்கவரி விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
அதற்கு மாறாக, தற்போதைய புதிய சட்டம் ரஷ்ய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை அதிகளவில் வாங்கும் முதல் ஐந்து நாடுகள் மீது 100 விழுக்காடு வரை சுங்கவரி விதிக்க அனுமதிக்கிறது.
முன்மொழியப்பட்ட இந்தச் சுங்கவரி குறைப்பு காகித அளவில் நிம்மதி அளிப்பதாகத் தோன்றினாலும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்ய முயன்று வரும் இந்தியாவுக்கு 100 விழுக்காடு வரி என்பது மிக அதிகமான ஒன்று என்கின்றனர் பொருளியல் நிபுணர்கள்.
