புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கூடுதல் வரிவிதிப்பிலிருந்து தப்புவதற்காக இந்தியாவில் ஐஃபோன் தயாரிப்பை ஆப்பிள் நிறுவனம் அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து 600 டன் ஐஃபோன்களை (கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ஐஃபோன்கள்) தனிச் சரக்கு விமானங்களில் அமெரிக்காவுக்கு ஆப்பிள் கொண்டுசென்றதாக விவரமறிந்த வட்டாரங்கள் ராய்ட்டர்சிடம் கூறின.
சீன இறக்குமதிகளைப் பெரிதும் சார்ந்திருக்கும் ஆப்பிளின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக திகழும் அமெரிக்காவில் ஐஃபோன் விலைகள் கணிசமாக உயரும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சீனப் பொருள்கள்மீது திரு டிரம்ப் வரிகளை 125 விழுக்காட்டுக்கு அதிரடியாக உயர்த்தியுள்ளார்.
இது, இந்திய இறக்குமதிகள் மீதான 26 விழுக்காட்டு வரியைவிட மிதமிஞ்சியதாக உள்ளது. ஆனால், அண்மையில் உலக நாடுகளின் இறக்குமதிகளுக்குத் தாம் விதித்த வரி, சீனாவைத் தவிர்த்துப் பெரும்பாலான நாடுகளுக்கு 90 நாள்கள் நிறுத்திவைக்கப்படுவதாகத் திரு டிரம்ப் புதன்கிழமை (ஏப்ரல் 9) அறிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் சுங்கச் சோதனைகளை நிறைவேற்றுவதற்கான நேரத்தை 30 மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரமாகக் குறைக்க இந்திய விமான நிலைய அதிகாரிகளிடம் ஆப்பிள் வற்புறுத்தியதாக அதுபற்றித் தகவலறிந்த வட்டாரம் தெரிவித்தது.
கடந்த மார்ச் முதல், 100 டன் எடையை ஏந்திச்செல்லும் ஆற்றலுடைய ஏறக்குறைய ஆறு சரக்கு விமானங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றுள்ளன. அவற்றில் ஒன்று, இந்த வாரம் புதிய வரிகள் நடப்புக்கு வந்த நிலையில் அமெரிக்காவுக்குப் பறந்ததாகத் தகவலறிந்த வட்டாரமும் இந்திய அரசு அதிகாரி ஒருவரும் கூறினர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து கேட்டதற்கு ஆப்பிளும் இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சும் பதிலளிக்கவில்லை. ஆப்பிளின் உத்தியும் இதுகுறித்த பேச்சுவார்த்தையும் தனிப்பட்டவை என்பதால் இத்தகவலைத் தெரிவித்த வட்டாரங்கள் தங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டன.