வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அடுத்த ஆண்டின் தொடக்கப் பகுதியில் இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வார் என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தள்ளார்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் திரு டிரம்ப்பின் பயணத்தின்போது கையெழுத்திடப்படலாம் என்று கூறப்படுகிறது.
அத்துடன், அவரது இந்தியப் பயணம் எரிசக்தி, தற்காப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் என்றும் தெரிகிறது.
இந்தியப் பொருள்களின் இறக்குமதிக்கு கடந்த ஆண்டு திரு டிரம்ப் 50 விழுக்காடு வரி விதித்தார். அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
திட்டமிட்டபடி திரு டிரம்ப் 2027ல் இந்தியா சென்றால், அந்த விரிசலுக்குப் பின்னர் அமெரிக்க அதிபர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணமாக அது அமையும்.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதர் கோர், அண்மையில் வாஷிங்டன் திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் திரு டிரம்ப்பின் இந்தியப் பயணத்தை உறுதிப்படுத்தினார்.
திரு டிரம்ப் இந்தியாவில் மேற்கொள்ள இருக்கும் பயணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.
இருதரப்பினரும் இணைந்து கட்டமைத்து வரும் எல்லா நடவடிக்கைகளுக்கும் டிரம்ப் - மோடி இடையிலான உறவே அடித்தளமாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, திரு டிரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா செல்லவிருப்பதை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோவும் உறுதிசெய்துள்ளார்.
திரு டிரம்ப்பின் வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக இந்த ஆண்டு முடிவதற்குள் தாம் இந்தியா செல்ல இருப்பதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
ஜி7 உச்சிமாநாட்டின்போது திரு டிரம்ப்பும் திரு மோடியும் நேரில் சந்தித்துப் பேசிய பின்னர் இந்திய-அமெரிக்க உறவு வலுவான நிலையை எட்டியதாகத் திரு ரூபியோ கூறினார்.

