ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை தகர்ந்துள்ளது: ராகுல் காந்தி

2 mins read
f9593e04-399d-41b6-93f9-ea640cc963f2
ராகுல் காந்தி. - படம்: ரிபப்ளிக் வோர்ல்ட்

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எரிச்சலூட்டும் வகையில் உள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை தகர்ந்துள்ளது என்றும் வாக்குத் திருட்டு என்பது தேச நலனுக்கு எதிரானது என்றும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் வாக்குப்பதிவின்போது கைவிரலில் வைக்கப்படும் அடையாள மை அழியாது என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ஆனால், மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்களித்தவர்களுக்கு விரலில் வைக்கப்படும் அடையாள மை அழிவதாக வெளியான புகாரையடுத்து, தேர்தல் ஆணையம் மக்களைத் திசை திருப்புவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் விஜய் வடெட்டிவாரும் சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ஷிர்சாத்தும் இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

கைவிரல்களில் வைக்கப்படும் மை எளிதில் அழிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் சாடிவரும் நிலையில், இக்கூற்றை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதால் அடையாள மையை அகற்றிய பின்னர் யாராவது மீண்டும் வாக்களிக்க முயன்றால் அது சாத்தியமாகாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக தமக்கும் சில தகவல்கள் வந்துள்ளதாக முன்னாள் முதல்வரான உத்தவ் தாக்கரே தெரிவித்தார். மாநிலத் தேர்தல் ஆணையம் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதாக அவர் சாடினார்.

அடையாள மை அகற்றப்படுவதால் கள்ள வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

“வாக்காளர்கள் அடையாள மை தொடர்பாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கடுமையான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

“குரல் எழுப்பி வரும் குடிமக்களை எரிச்சலூட்டும் வேலையைச் செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.

இது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது,” என்று ராகுல் காந்தி தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்