புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இத்தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும் அவை பசுமைப் பட்டாசுகளாக இருக்கவேண்டும் என்றும் கூறியது.
அத்துடன், பட்டாசு வெடிப்பது தொடர்பாக எட்டுக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையன்று பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளைக் கொண்டாடும் விதமாக தடையை தளர்த்தலாம் என மத்திய அரசு, டெல்லி பாஜக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி கவாய், “தற்போதைக்கு, ஐந்து நாள்களுக்குத் தடையை நீக்குவதற்கு நாங்கள் அனுமதிப்போம். பசுமைப் பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட வேண்டும்,” என்று கூறியதுடன் “குழந்தைகள் உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடட்டும்,” என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அதேசமயம் இந்த உத்தரவால் டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
டெல்லியில் காற்றுமாசு கடுமையாக இருந்து வரும் நிலையில், பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டு வந்தது.
இதனால், இங்கு பட்டாசுகளை தயாரிப்பது, சேமிப்பது, விற்பனை செய்வது, இணையம் வழி விற்பது, வெடிப்பது என அனைத்துக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
டெல்லியில் தற்போது காற்று மாசுபாடு சற்றுக் குறைந்திருக்கும் நிலையில், சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பின், இந்த ஆண்டு தீபாவளியன்று பட்டாசு வெடிக்க அனுமதி கிடைத்திருக்கிறது.