மாணவியை 3 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த துணைப் பாட ஆசிரியர்

2 mins read
2e7dfb46-a5a1-45d7-8b85-3e2a159cde6d
துணைப் பாட ஆசிரியர் சரத். - படம்: இந்திய ஊடகம்

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள வெள்ளாஞ்சிரா பகுதியை சேர்ந்தவர் சரத் (வயது 28). இவர் அந்த பகுதியில் 3 துணைப் பாட நிலையங்கள் நடத்தி வருகிறார். அதில் ஒரு நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-1 மாணவி ஒருவர் கணிதத்திற்கான துணைப் பாட வகுப்பில் சேர்ந்தார்.

அப்போது அந்த மாணவியை, அவருக்குத் தெரியாமல் துணைப் பாட நிலைய உரிமையாளரான ஆசிரியர் சரத், நிர்வாண காணொளியும் புகைப்படமும் எடுத்திருக்கிறார். அதனை காண்பித்து மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அத்துடன் அந்த மாணவியின் சமூக வலைத்தளப் பக்கத்தைக் கையாண்டு வந்துள்ளார்.

அந்த மாணவி தற்போது பி.டெக். படிக்கும் நிலையில், சரத்தின் துணைப் பாட நிலையத்தில் தொடர்ந்து படிக்கிறார். தன்னிடம் உள்ள நிர்வாண படங்களைக் காண்பித்து மிரட்டியபடி கடந்த 3 ஆண்டுகளாக மாணவியை ஆசிரியர் சரத் பாலியல் வன்கொடுமை  செய்திருக்கிறார்.

துணைப் பாட ஆசிரியர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவந்த தகவலை, அந்த மாணவி தனது தோழி ஒருவரிடம் தெரிவித்தார். தோழியின் அறிவுறுத்தலின் பேரில் துணைப் பாட ஆசிரியர் சரத் மீது பாதிக்கப்பட்ட மாணவி, ஆளூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பிறகே துணைப் பாட ஆசிரியரால் மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. மாணவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து துணைப் பாட ஆசிரியர் சரத்தை கைது செய்தனர்.

மாணவியின் ஆபாச படங்கள் உள்ளதா என்று ஆசிரியரின் செல்போன் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆசிரியர் சரத் இதுபோன்று வேறு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்