புதுடெல்லி: அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் இந்தியாவிற்குத் தாம் மேற்கொண்டுள்ள அதிகாரத்துவப் பயணத்தின் ஓர் அங்கமாக திங்கட்கிழமை (மார்ச் 17) இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, அமெரிக்க மண்ணில் இருந்தபடி இந்தியாவிற்கு எதிராகச் செயல்படும் ‘நீதிக்கான சீக்கியர்கள் (எஸ்எஃப்ஜே’) எனும் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும் என்று திரு சிங், திருவாட்டி கப்பார்டிடம் வலியுறுத்தினார்.
“எஸ்எஃப்ஜே அமைப்பு குறித்த தனது கவலைகளை முன்வைத்த இந்தியா, அவ்வமைப்புமீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது,” என்று அரசு வட்டாரங்கள் கூறியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறப்படுவதால், எஸ்எஃப்ஜே அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான தற்காப்பு, பாதுகாப்புத் தொடர்புகளை மேம்படுத்துவதன் தொடர்பில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
“அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டை டெல்லியில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். தற்காப்பு, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாங்கள் கலந்து பேசினோம். இந்திய-அமெரிக்க பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவது நோக்கமாகும்,” என்று திரு ராஜ்நாத் சிங் கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலும் திருவாட்டி துளசி கப்பார்டுடன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், உலக நாடுகளின் உளவுத்துறைத் தலைவர்களுக்கு இடையே நடந்த சந்திப்பைய்உம் திரு தோவல் வழிநடத்தினார். பயங்கரவாதம், தொழில்நுட்பம் சார்ந்த மிரட்டல்கள் போன்ற அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் தொடர்பில் அந்தச் சந்திப்பு நடந்தது.
தொடர்புடைய செய்திகள்
திரு தோவலுக்கும் திருவாட்டி கப்பார்டுக்கும் இடையே நடந்த சந்திப்பில், இந்திய - அமெரிக்க உத்திபூர்வ பங்காளித்துவத்துக்கு ஏற்ப உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது, பாதுகாப்பு தொடர்பில் ஒத்துழைப்பது ஆகியவற்றில் முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட்டது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
திருவாட்டி கப்பார்ட், டெல்லிக்கு இரண்டரை நாள்கள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ஜப்பான், தாய்லாந்து, பிரான்ஸ ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார். அப்பயணத்தின் ஓர் அங்கமாக அவரின் இந்தியப் பயணம் அமைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது திருவாட்டி கப்பார்ட், திரு மோடியைச் சந்தித்தார்.