தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கருத்துக்கணிப்பு: பாஜக கூட்டணிக்கு சாதகம்; தமிழகத்தில் திமுக ஆதிக்கம்

2 mins read
e59d0ee2-9b43-4dda-bb6f-79bd4ec6d854
ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜூன் 1) முடிவடைந்தது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்படும். (படத்தில்) சனிக்கிழமை நடந்த ஏழாவது கட்டத் தேர்தலில் அமிர்தசரஸில் வாக்களித்த மக்கள். - படம்: இபிஏ

இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜூன் 1) நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட 44 நாள்கள், ஏழு கட்டங்களாக நடந்த இந்தத் தேர்தலில் ஏறக்குறைய 968 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

இந்நிலையில், பல்வேறு ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளன. பாஜக கூட்டணி குறைந்தபட்சம் 350 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் இண்டியா கூட்டணிக்கு 125 முதல் 160 இடங்களே கிட்டும் என்றும் கணிப்புகள் சுட்டுகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பெரும்பாலான கணிப்புகள் திமுகவுக்குச் சாதகமாக உள்ளன.

ரிபப்ளிக் தொலைக்காட்சி, பாஜக 359 தொகுதிகளையும், இண்டியா கூட்டணி 157 தொகுதிகளையும், பிற கட்சிகள் 30 தொகுதிகளையும் கைப்பற்றும் எனக் கணித்துள்ளது.

என்டிடிவி தொலைக்காட்சியின் கணிப்பு, பாஜக 371 இடங்களையும், இண்டியா கூட்டணி 125 இடங்களையும், பிற கட்சிகள் 47 இடங்களையும் கைப்பற்றும் எனக் கூறுகிறது.

நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பு, பாஜக கூட்டணிக்கு 371, இண்டியா கூட்டணி 125, பிற கட்சிகளுக்கு 47 இடங்கள் கிடைக்கும் எனக் கூறுகிறது. நியூஸ் எக்ஸ் கணிப்பும் என்டிடிவி கணிப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உள்ளன.

தென்மாநிலங்களின் நிலவரம்

தென்மாநிலங்களைப் பொறுத்தவரை, ஆந்திரா, கர்நாடகாவில் பாஜகவுக்கு அதிக தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் எனத் தெரிகிறது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியும் தமிழகத்தில் திமுகவும் ஆதிக்கம் செலுத்தி உள்ளன.

இண்டியா டுடே கருத்துக்கணிப்பின்படி, தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 26 முதல் 30 தொகுதிகளிலும் பாஜகவுக்கு 1 முதல் 3 இடங்களிலும் வெற்றி கிட்டும்.

சிஎன்என் கருத்துக்கணிப்பு, தமிழகத்தில் திமுகவுக்கு 36 முதல் 39 தொகுதிகளும் பாஜகவுக்கு 1 முதல் 3 தொகுதிகளும் கிடைக்கும் என்கிறது.

ஆந்திராவில் இம்முறை பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

ஆந்திராவின் 25 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 22 தொகுதிகள் வரை கைப்பற்றும் எனவும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் கட்சி அதிகபட்சமாக மூன்று தொகுதிகளிலேயே வெற்றி பெறும் எனவும் கணிப்புகள் தெரிவித்தன.

கர்நாடகாவின் 28 மக்களவைத் தொகுதிகளில் இம்முறை பாஜக 23 முதல் 25 தொகுதிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் கூட்டணிக்கு மூன்று முதல் ஏழு தொகுதிகள் வரை கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கேரளாவின் 20 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சிக்கு 14 முதல் 19 இடங்கள், பாஜகவுக்கு 1 முதல் 3 இடங்கள், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிகபட்சம் நான்கு இடங்கள் கிடைக்கலாம் என்றும் கணிப்புகள் சுட்டுகின்றன.

தெலுங்கானாவின் 17 தொகுதிகளில், பாஜக கூட்டணிக்கு 10 இடங்களும் இண்டியா கூட்டணிக்கு 5 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது.

ஏபிபி நியூஸ், இந்தியா நியூஸ், இண்டியா டுடே, ஜன் கி பாத், இந்தியா டிவி உள்ளிட்டவை கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.

குறிப்புச் சொற்கள்