சென்னை: தமிழக அரசியலில் மீண்டும் ஓர் இடைத்தேர்தல் களம் உருவாகியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியது, கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு உள்ளிட்ட காரணங்களால் காலியாக உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி கிழக்கு, கொளத்தூர், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர் ஆகிய ஆறு தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.
திருச்சி கிழக்குத் தொகுதியில் வென்ற முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ பதவியில் இருந்து விலகினார்.
அதேபோல், தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானதால் கொளத்தூர் தொகுதியும் காலியானது. இதையடுத்து முதல்வரின் திருச்சி பயணம் ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், டாக்டர் சி.விஜயபாஸ்கர், எஸ்.ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய நான்கு முன்னாள் எம்எல்ஏக்களின் பதவிவிலகலைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டதை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், தகுதி நீக்க மனுக்கள் மீது இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, கோவா, உத்தராகண்ட், பஞ்சாப் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுடன் இணைத்து, தமிழகத்தின் ஆறு தொகுதிகளுக்கும் ஜனவரியில் அட்டவணை வெளியிடப்பட்டு, பொங்கலுக்குப் பிறகு வாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தாராபுரம், மதுராந்தகம் வெற்றிகளுக்குப் பிறகு, இந்த ஆறு தொகுதிகளிலும் கட்சி மாறிய முன்னாள் எம்எல்ஏக்களையே மீண்டும் களமிறக்க தவெக திட்டமிட்டுள்ளது. மறுபுறம், சீமான் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்களை முடிவு செய்வோம் என்றும் திமுக தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து, டிசம்பர் 10, 11ஆம் தேதிகளில் முடிவெடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர், தங்களுடைய நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது எதிர்வரும் இடைத்தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவும் சூழல் காணப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
