ஒரே ஓடுபாதையில் நேருக்கு நேர் இரு விமானங்கள்

ஒரே ஓடுபாதையில் நேருக்கு நேர் இரு விமானங்கள்

2 mins read
db9bdfd5-99f5-4bf6-8628-a97987228ead
ஓடுபாதைத் திருப்பத்தைத் தவறாகத் தேர்வு செய்துவிட்டதாக, இந்தச் சம்பவத்தில் தொடர்புள்ள ஏர் இந்தியா விமானம் பின்னர் தெரிவித்தது. - கோப்புப் படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்தில் இரு விமானங்கள் ஒரே ஓடுபாதையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதால் பதற்றம் நிலவியது.

தற்செயலாக, ஓடுபாதைத் திருப்பத்தைத் தவறாகத் தேர்வு செய்துவிட்டதாக, இந்தச் சம்பவத்தில் தொடர்புள்ள ஏர் இந்தியா விமானம் பின்னர் தெரிவித்தது.

164 பயணிகளுடன் புதன்கிழமை (ஜூன் 24) மாலை ஏர் இந்தியா விமானம் ஒன்று அகமதாபாத்தில் அதற்கான ஓடுபாதையில் தரையிறங்கியது. பின்னர் விமானம் நிறுத்தும் இடம் நோக்கி அது செல்ல வேண்டும்.

அப்போது ஏர் இந்தியா விமானத்தின் விமானி முதன்மை ஓடுபாதையில் இருந்து விமான நிறுத்துமிடம் நோக்கிச் செல்லும் டாக்சி பாதை ஒன்றைத் தவறாகத் தேர்வு செய்துவிட்டதாகக் தெரிகிறது.

அதேவேளையில், அதே ஓடுபாதையில் இண்டிகோ விமானம் ஒன்று புறப்படத் தயாரானது. முதன்மை ஓடுபாதையை நோக்கி இண்டிகோ விமானம் புறப்படத் தயாரானது. இதனால் இரு விமானங்களும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டன.

அதன் பிறகே ஏர் இந்தியா விமானம் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தது தெரிய வந்தது. எனினும், இரு விமானங்களும் ஒன்றையொன்று கவனித்து, பாதுகாப்பான தூரத்தில் நின்றுவிட்டன.

அதன் பின்னர் ஏர் இந்தியா விமானம் அகற்றப்பட்டது என்றும் இண்டிகோ விமானம் 20 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது என்றும் இண்டிகோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதனிடையே பயணிகள், பணியாளர்களின் பாதுகாப்பில் எந்தவிதச் சமரசமும் செய்யப்படவில்லை என ஏர் இந்தியா நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

நடந்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு விவரம் தெரிவிக்கப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்