நாடுகடத்தப்பட்ட பின் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்த இரு பங்ளாதேஷ் பெண்கள் கைது

1 mins read
cdea6b8f-d3e3-4af4-9c32-1395103e3085
கைதான இரு பெண்களில் ஒருவரான ஸுலேகா ஜமால் ஷேக். - படம்: மும்பை காவல்துறை

மும்பை: கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட போதிலும், மீண்டும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இரண்டு பங்ளாதேஷ் பெண்களை மும்பை காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர்.

முதல் சம்பவத்தில், கேட்வே ஆஃப் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை 38 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டினர் சட்டத்தின்கீழ் காவல்துறையினர் அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

செல்லுபடியாகும் ஆவணங்கள் ஏதுமின்றி பங்ளாதேஷ் பெண் ஒருவர் கேட்வே ஆஃப் இந்தியாவில் இருப்பதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தம்மை ஸுலேகா ஜமால் ஷேக் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.

கடந்த ஆகஸ்ட்டில் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு பங்ளாதேஷ் அதிகாரிகளிடம் தாம் ஒப்படைக்கப்பட்டதாக ஸுலேகா தெரிவித்தார்.

இருப்பினும், சில காலம் கழித்து, இந்திய-பங்ளாதேஷ் எல்லையில் உள்ள வனப்பகுதிகள் வழியாக அவர் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்தார். கடப்பிதழ், விசா அல்லது பிற முறையான பயண ஆவணங்கள் எதனையும் காட்ட அவர் தவறிவிட்டார்.

ஸுலேகாவின் உண்மையான முகவரி பங்ளாதேஷின் ஜாஷோர் மாவட்டத்தில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

அந்தப் பெண் எல்லையைத் தாண்ட உதவியவர்கள் யார் என்பது குறித்தும் இதில் ஏதேனும் திட்டமிடப்பட்ட கும்பலுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டாவது சம்பவத்தில், 30 வயது பில்கிஸ் பேகம் சிர்மியா அக்தர் என்பவர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார். அவர் மும்பையின் கஃப் பரேட் பகுதியில் வசித்து வந்தார்.

குறிப்புச் சொற்கள்