சகோதரர்களை மணந்த சகோதரிகள் மறுநாளே பணம், நகைகளுடன் மாயம்

சகோதரர்களை மணந்த சகோதரிகள் மறுநாளே பணம், நகைகளுடன் மாயம்

ஊடகம்

25 Nov 2023 - 7:42 pm

1 mins read

லக்னோ: அண்ணன் - தம்பியை மணந்த அக்காளும் தங்கையும் மணமகன்கள் குடும்பத்தார்க்கு மயக்க மருந்து கொடுத்து, திருமணத்திற்கு மறுநாளே நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு கம்பிநீட்டினர்.

இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் நிகழ்ந்தது.

சகோதரிகள் எனக் கூறிக்கொண்ட 30 வயது பூஜா குமாரியும் 29 வயது ஆர்த்தி குமாரியும் முறையே சகோதரர்களான 31 வயது பிரதீப் சிங்கையும் 28 வயது குல்தீப் சிங்கையும் கடந்த புதன்கிழமை மணந்துகொண்டனர்.

அன்றைய நாள் இரவு தங்கள் கணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்கள் மயக்க மருந்து கலந்து விருந்து பரிமாறினர். அதன்பின் அவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றதும் சகோதரிகள் இருவரும் பணம், நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகினர்.

இதனையடுத்து, சகோதரிகள் இருவர்மீதும் அவர்களின் குடும்ப உறுப்பினர் எனக் கூறிக்கொண்டு, அவர்களை மணமகன்கள் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்திய ராஜ்குமார் என்ற ஆடவர்மீதும் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.

இத்திருமணத்திற்காக ராஜ்குமாருக்கு ரூ.80,000 கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

மணமகன்களின் தந்தை சில ஆண்டுகளுக்குமுன் இறந்துவிட்டார். அவர்களின் தாயாருக்குக் கண் தெரியாது எனக் கூறப்பட்டது.

“கண் தெரியாத எங்கள் அம்மா, புது மருமகள்களுக்காக ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் செலவுசெய்து, உடைகளையும் நகைகளையும் வாங்கினார்,” என்று பிரதீப் கூறினார்.

திருமணத்தின்போது தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருள்களையும் அவ்விரு பெண்களும் அள்ளிச் சென்றுவிட்டனர் என்றும் அவர் வருத்தத்துடன் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
திருமணம்நகைபணம்ஓட்டம்