திருவனந்தபுரம்: நிபா கிருமித்தொற்றுக்கு இருவர் பலியானதைத் தொடர்ந்து கேரளாவின் சில பகுதிகளில் உச்சக்கட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
நிபா கிருமி மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஆண்டுதோறும் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக நிபா கிருமிப் பாதிப்பு இருந்து வருகிறது.
பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே குமரமபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 57 வயது ஆடவர் ஒருவர் கடந்த சில நாள்களாக தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.
தமது பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் அவருக்குக் காய்ச்சல் குணமாகவில்லை.
அவரது உடல்நிலை மிகவும் மோசமானதையொட்டி மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலின் திரவ மாதிரிகளை சேகரித்துப் பரிசோதித்ததில் நிபா கிருமி பாதிப்பால் அவர் இறந்தது தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
சில நாள்களுக்கு முன்பு நிபா கிருமியால் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். தற்போது நிபா மரண எண்ணிக்கை இரண்டாகி உள்ளது.
இதையடுத்து, மாநில சுகாதாரத்துறை நிபா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மலப்புரம், பாலக்காடு, பெரிந்தல்மன்னா, கோழிக்கோடு பகுதிகளில் தீவிரப்படுத்தியுள்ளது. இத்தகவலை சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார்.
முதற்கட்டமாக, நிபா கிருமி பாதித்து இறந்த ஆடவரின் வீட்டைச் சுற்றி மூன்று கிலோமீட்டர் சுற்றளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அங்குள்ள பகுதிக்குள் வெளியில் இருந்து நபர்கள் வரவும் அங்குள்ள மக்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக, உயிரிழந்த இருவருடனும் கிருமித்தொற்று நோயாளிகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்த 609 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களிடம் கிருமிப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.