பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் விநியோகித்த இரு கும்பல்கள் பிடிபட்டன

பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் விநியோகித்த இரு கும்பல்கள் பிடிபட்டன

2 mins read
d83b991f-92bb-4d63-945f-5bb48cb99161
ஆயுதங்களை காட்டுப் பகுதியில் மறைத்துவைக்க சந்தேகப் பேர்வழிகள் திட்டமிருந்தது விசாரணையின்போது தெரியவந்தது. - கோப்புப்படம்: ஏஎஃப்பி

ருத்ராபூர் (உத்தராகண்ட்): ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாதக் கும்பலுக்கு கள்ளத்தனமாக ஆயுதங்களை விநியோகித்துவந்த இரு கும்பல்களை இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

அக்கும்பல்களில் வெவ்வேறு மாநிலத்தவர் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹரேந்தர் சிங் என்ற ஹனி, நிகில் வர்மா என்ற ரானு என்ற இருவரும் அல் பதர் என்ற இயக்கத்தைச் சேர்ந்த ரேகான் மிர் என்பவருக்கு 2021ஆம் ஆண்டில் ஆயுதங்களை விநியோகம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 8) வாகனப் பதிவெண் இல்லாமல் வந்த ஒரு காரைச் சோதனையிட்டபோது அதிலிருந்து ஐந்து துப்பாக்கிகளையும் 344 தோட்டாக்களையும் பறிமுதல் செய்ததாக உதம் சிங் நகர் காவல்துறை உயரதிகாரி அஜய் கணபதி கூறினார்.

சோர்காலியா காட்டுப் பகுதியில் அந்தச் சட்டவிரோத ஆயுதங்களை மறைத்துவைக்க சந்தேகப் பேர்வழிகள் திட்டமிட்டிருந்தது விசாரணையின்போது தெரியவந்தது.

சந்தேகப் பேர்வழிகளின் கைப்பேசி எண்களும் வங்கிக் கணக்குகளும் ஆராயப்பட்டன. அப்போது, ரேகான் உட்பட ஜம்மு-காஷ்மீரில் உள்ள பல வங்கிக் கணக்குகளுக்குச் சந்தேகத்திற்குரிய வகையில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகத் திரு கணபதி கூறினார்.

ரேகான், ஹனி இருவர்மீதும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்து, தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரேகான் தொடர்பில் மேல்விவரங்களைத் திரட்டி வருவதாகக் கூறிய அவர், வழக்கு குறித்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் டெல்லி காவல்துறைக்குத் தகவல் அனுப்பியுள்ளதாகவும் சொன்னார்.

இவ்விவகாரத்தில் இந்திரஜித் சந்து, பவன் சந்து என்ற இருவர் மூளையாகச் செயல்படுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்களைப் பிடிப்பதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து, பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டும், கள்ளத்தனமாக ஆயுதங்கள் விநியோகிக்கும் கும்பல் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்