காத்மாண்டு: போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நேப்பாளத்தின் திரிபுவன் அனைத்துலக விமான நிலையத்தில் இந்தியர்கள் இருவரை அந்நாட்டுக் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 21) கைது செய்தனர்.
அந்த விமான நிலைய வருகையாளர் குடிநுழைவுப் பகுதியில் 4.284 கிலோ கஞ்சாவுடன் 33 வயது ரஞ்சித் சிங் பிடிபட்டார்.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் நேப்பாளம் வந்திறங்கியதாகவும் விமான நிலையப் பாதுகாப்பு, சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது கண்டறியப் பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அந்த போதைப்பொருளைப் பெற விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் 33 வயது புனித் சர்மா என்பவர் காத்திருந்தார் என்றும் அவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கைதான இருவரும் விசாரணைக்காக நேபாள காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

