நியூயார்க்: சரக்குந்து ஒன்றில் மறைத்துவைத்து 300 பவுண்டுக்கும் (136 கிலோ) அதிகமான கொக்கைன் போதைப்பொருளைக் கடத்தியதாகக் கூறி, இந்தியர் இருவரை அமெரிக்க அதிகாரிகள் கைதுசெய்தனர்.
குர்பிரீத் சிங். 25, ஜஸ்வீர் சிங், 30 என்ற அவ்விருவரும் ஜனவரி 4ஆம் தேதி இண்டியானா மாநிலக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
அவ்விருவரும் உரிய அனுமதியின்றி அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகக் கூறப்பட்டது.
ஆயினும், கலிஃபோர்னிய மாநிலத்தில் அவர்கள் வணிக வாகன ஓட்டுநருக்கான உரிமத்தைப் பெற்றிருந்தனர்.
“1.2 கிராம் என்ற மிகச் சிறிய அளவில் கொக்கைன் உட்கொண்டாலே ஒரு மனிதன் இறந்துவிடுவான். அப்படிப் பார்த்தால், 113,000 பேருக்குமேல் கொல்வதற்கான கொக்கைன் அவர்களிடம் இருந்தது,” என்று காவல்துறை தெரிவித்தது.
கடந்த 2023 மார்ச் 11ஆம் தேதி குர்பிரீத் சிங் கள்ளத்தனமாக அமெரிக்காவில் நுழைந்தார். இதனை அவரே ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை கூறியது.
அதுபோல, கடந்த 2017 மார்ச் 21ஆம் தேதி ஜஸ்வீர் சிங் கள்ளத்தனமாக அமெரிக்காவில் நுழைந்தார்.
திருட்டுப் பொருள் ஒன்றைப் பெற்றதற்காக 2025 டிசம்பர் 5ஆம் தேதி கலிஃபோர்னியாவில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

